முகுந்த் நாகராஜன் கவிதைகள்

1)
நீர் தெளித்து விளையாடுதல்

முன் பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.



2)
குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?



3)
ஒரே முறை தான்

கலவரம்
பழக்கப்பட்ட ஊரின்
முகம் மாறிப் போயிற்று.
தினம் போகும், வரும் சாலையில்
டயர்களை எரித்துக் கொண்டிருந்தார்கள்
கோஷம் போட்டபடி.
தற்காலிக உற்சாகத்தில்,
பாதையின் குறுக்கே விழ
மரத்தை அறுத்தது ஒரு கும்பல்.
அப்போதுதான்
முதல் தடவையாய்
அந்த மரத்தை
அங்கு பார்த்தேன்.



4)
விளையாட்டுப் பிள்ளைகள்

இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்.
ஒன்று
ஊஞ்சலில் நின்றும், உட்கார்ந்தும்,
ஒற்றைக்காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக்கொண்டும்
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?



5)
பூ விற்றவர்களில் ஒருத்தி

ரயில் விட்டு இறங்கி
கூட்டத்தில் நடந்தபோது
இரு புறமும் விதவிதமாகக்
கூவிப் பூ விற்ற குரல்களில் ஒன்று
'எவ்வளோ அழகா இருக்கு பாரும்மா மல்லி'
என்று சொல்லிக் கொண்டிருந்தது அடிக்கடி;
வியாபாரியின் குரல் மாதிரியே இல்லை.



6)
ஒரே நாளில்

நீ என் காதலை மறுத்த
அதே நாள் மாலை
எங்கள் தெரு சலவைக்கடை
இடம் மாறி
வெகு தொலைவுக்குச் சென்றது.
இப்படி
ஒரே நாளில்
எல்லோரும் என்னைக்
கை விட்டால் எப்படி?



7)
என்னிடம் பெரிதாக

'வாழ்க்கை எப்படிப் போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவண பவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ?

8)
தொலைத்த பந்துகள்

அடித்த பந்தை
எடுக்க வந்தார்கள் அவர்கள்.
சத்தம் போட்டுப்
பந்தைத் தேடினார்கள்.
நானும் இணைந்து தேடினேன்
என் சின்ன வயசை.
கிடைத்த பின்
நன்றி சொல்லிப் போனார்கள்
கேட்-டை சரியாக மூடிவிட்டு.

9)


        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

நரன் கவிதைகள்