நரன் கவிதைகள்





தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி
தன் வீட்டைச் சுத்தப்படுத்தி
குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் .
பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் .

தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி
தன் தெருவைச் சுத்தப்படுத்தி
குப்பைகளை .
நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான்
நகரத்தில் நோய்த் தொற்று அதிகம் .
கொசு மருந்து அடிக்க தன்னிடமே ஒப்புதல் வாங்கிக் கொள்கிறான் .

தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி
பின் நகரைச் சுத்தம் செய்து
கப்பலிலேற்றி அருகிருக்கும் நாட்டில் கொண்டு போய்க் கொட்டுகிறான் .
அதற்குத் தானே டெண்டர் விட்டுத் தானே டெண்டர் எடுத்துக் கொள்கிறான்.

***

ஒரு காட்டு மரம்
அது தன்னைத் தானே விதைக்கும்.
தனக்குத் தானே நீரூற்றித் தன்னைத் தானே வளர்க்கும்.
வேனலில் தனக்குத் தானே காற்றை வீசிக் கொண்டு உறங்கும் .
கடும் புயலின் நாளில் தீராத மன உளைச்சலில் தன் கரங்களை ,சிரசை ,
சமயங்களில் தன் மொத்த உடலையே வெட்டிக் கொண்டு சரியும் .
எப்போதாவது தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு கருகும் .

தனக்குத் தானே நாற்காலி செய்து போட்டுக் கொண்டு அதில் உட்கார்ந்திருக்கும் .
இல்லையேல் மேசையாகி கை , கால் ஊன்றிக் குனிந்து கிடக்கும்

மரங்கள் நாற்காலிகளை விளைவிக்கிறது.
மரநாற்காலிகளில் அமர்ந்தபடி
மரங்களை விலை பேசும் மரக்கடைக்காரரை என்ன சொல்ல ….
மரக்கடைக்காரா…,
அங்கே கொஞ்சம் பசுமையான என் நினைவுகளின் மீதும் உட்கார் .
அதன் அடியிலும் உட்கார்.

***

இரவுக்கும் பகலுக்குமிடையே ஒரு சிறு கயிற்று  பாலம்
பூரானை மல்லாக்கக் கவிழ்த்தியபடி
கிட்டத்தட்ட  ஒரு மணி நேர நீளமுடையது அது .
அதன் மேல் பள்ளிச் சிறுவர்கள் கால் பந்து விளையாடுகிறார்கள் .
காதலர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள் .
பணியிடத்திலிருந்து அரசுஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள் .
அதன் ஒரு முனையில்; பகலிருக்கும் திசையிலிருந்து
ஒரு சிறுமி அவளின் முதல் மாதவிடாய் ஒழுக்கோடு
மறுமுனையில் இரவிருக்கும் திசை நோக்கி
ஒரு பேரிளம்பெண் அவளின் இறுதி மாதவிடாய் ஒழுக்கோடு…
அதே நிறம்தான் அந்தக் கயிற்றுப் பாலத்துக்கு.
***

ஆட்டுக்காரா…
சமண மலையின் உள்ளே 17ஆயிரம் தேரைகள்

நீ யாரை மேய்த்து கொண்டு செல்கிறாய் …
உன் ஆடுகளின் மேல் சிறு சிறு உண்ணிகள்
அதையும்தான் அழைத்துக் கொண்டு செல்கிறாய் மேய்ச்சலுக்கு ….
யாருக்காய் குழலூதுகிறாய் …
உண்ணிகள் மயங்குகின்றன …

ஆடுகள் உன் மனைவியையும் , தாயையும் உண்டு விட்டன .
உண்மைதான் .
அதன் கடைவாயில் வெண்ணிற பெண் முடிகள் ….
கடந்த வாரம் அதன் இணை ஆட்டின் கறுத்த முடிகளை
உன் கடை வாயில் பார்த்ததாய் நினைவு .

அதன் தகப்பனை விருந்துண்டீர்கள் அல்லவா.
உன் தகப்பனைப் புதைந்த இடம் தெரியும் அதற்கு

நேசம் மிகுந்த ஒரு ஆடு
அது  புதைந்த உன் தந்தையின்
திறந்த வாயின் இடையே வளர்ந்த  புற்களை
முத்தமிட்டபடியே உண்டு கொழிக்கும் .

கோபம் மிகுந்த ஒரு ஆடு
அது  புதைந்த உன் தந்தையின்
இரு தொடை நடுவே  வளர்ந்த புற்களை
கர முர…கர முரவென்று …

****

தளபதியாரே  …
உமது கணீர் உலோகக் குரல்கள் துருப்பிடித்து விட்டன.
முகபாடத்தைத் தாண்டி குதிரைகளின் வாய்களில்  நுரை தள்ளுகிறது. .
ஆடைகளில் ஒரு அங்குலத்திற்கு புழுதிகள் .
குதிரைகளின் பிடரி மயிர்களில் விந்துக் கறைகள்.
வேண்டுமென்றே பின்தங்கி வரும் படை வீரர்கள்
மற்றும் வழி தவறுபவர்கள்
தத்தம் போர் கருவிகளை விற்றுத் தீர்த்து  மதுவருந்துகிறார்கள்.
அல்லது  தாசிப் பெண்டிரோடு
கிருஷ்ணா  லாட்ஜ் – ல்  அறை  எடுக்கிறார்கள் .
மூன்றாம் ஜாமத்தில் கூடாரம் திரும்புமவர்கள் .
வேறொருவனின் போர்கருவிகளில் தம் அடையாளத்தைப் பதிகிறார்கள் .
அடுத்த நாளின் காலையில் எழுவர் வெறுங்கையர்.
போர்…போர் …
தூரத்தே களம் கண்டீரா?
வெற்ற்ற்ற்றி வேவேவேல் வீவீவீவீர வேல் ….
உமது குரல் ஏன் இவ்வளவு   தளர்கிறது .
காலையில் bp மாத்திரை போட்டீரா ?
கொஞ்சம் மதுவருந்துகிறீரா?
ஓய்வெடுங்கள் .  “கிருஷ்ணா  லாட்ஜ் ” அருகில்தான் இருக்கிறது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்