ஒரு ஆப்பிளின் டைரியிலிருந்து

0
0

நானொரு ஆப்பிள் என்றுணர்ந்த போது
கத்திகளை விட வாய்களுக்குதான்
அதிகம் பயந்தேன்
ஏனெனில் அவைகள்தான் வடிவமின்றி
என்னை தாராளத்தில் கொய்கின்றன

நானொரு ஆப்பிளாக பிறந்திருக்க கூடாது
இத்தனை சிவப்பு
இத்தனை மதிப்பார்ந்த விலை
இத்தனை நுண்ணிய விதைகளென
சந்தையில் அத்தனை பரபரப்போடு
திருப்பி பார்க்கிறவர்கள் என்னை எடுப்பவர்களாக இல்லை
என்னை காஷ்மீரா என்று கேட்கிறார்கள்
கடைக்காரர் ஆமாமென்கிறார்
எனக்கு கத்த வேண்டும் போல் இருக்கிறது
திறந்த மாதுளையே
அதான் உனக்கு பற்கள் இருக்கிறதே அத்தனையும் மிளிர மிளிர சப்தமிடுவேன்
எனக்காக சப்தமிடு
கடைக்காரன் பொய் சொல்கிறான்
நான் காஷ்மீர் இல்லை
நான் இன்னும் பழுக்க கூட இல்லை
மாதுளையே சப்தமிடு
உன் செம்பற்களில் சாறுகளை ஈக்கள் அருந்தாது நீ சப்தமிடு
உரக்க சப்தமிடு
நான் இனிக்க மாட்டேன்
நான் காஷ்மீர் இல்லை
நான் இந்த தேசம் இல்லை
நான் ஆப்பிளே இல்லை..!



01

உன்னை மாதிரி ஒரு பழுத்த ஆப்பிளை
நான் பார்த்ததேயில்லை
உன்னை மாதிரி சிவந்த ஆப்பிள்
என் கூடையில் இருப்பது எனக்கு
பெருமையாய் இருக்கிறது
உன்னை நான் உண்ணப்போவதில்லை
உன்னை குளிர் பெட்டிக்குள் வைக்கப் போகிறேன்
உன்னை காலங்காலமாக வைத்து
எல்லோரிடமும் காண்பிக்கப் போகிறேன்
சந்தையில் ஒரு நல்ல ஆப்பிள் கிடைப்பது
அத்தனை சுலபமில்லை..!



02

எனக்காவே இரண்டு ஆப்பிள்களை
விட்டு வைத்திருக்கிறார்கள்
அதிலொன்று எலிகளால் பாதி நொய்யப்பட்டது
மற்றொன்று சர்க்கரை நோயினால்
உடல் அழுகியது
ஒருவனுக்கு இரண்டு ஆப்பிளென்பது
அதிகம்தான்
இரண்டு ஆப்பிள்களுக்கு
ஒருவனென்பதும் அவமானம்தான்..!



03

இதை நீங்கள் செய்திருப்பீர்கள்
உங்களின் பிஞ்சு குழந்தை
பார்த்ததிற்காகவே அதன் கையில்
என்னை மாதிரியான
ஆப்பிளை திணித்திருப்பீர்கள்
உங்களின் செல்ல காதலி சிரிக்கும்
போது அவர்களின் கன்னங்களோடு
என்னை உவமைத்திருப்பீர்கள்
ஒரு ஆப்பிள் நான்கு சொட்டு இரத்தமென
பாடமெடுத்திருப்பீர்கள்
உங்களுக்கு தெரியுமா
என்னை இனிமேல் உங்கள்
குழந்தைகளின் கையில் புதைக்காதீர் ஏனெனில் என்னுள்ளும் பூச்சி கடிக்கிறது
என்னை உங்கள் காதலிகளின்
கன்னத்தோடு தொடுக்காதீர் ஏனெனில்
நானும் அழுகிப் போவேன்
நான்கு சொட்டு ரத்தமென்றெல்லாம்
புகழ்ச்சி பாடாதீர்கள்
இப்போதுதான் சற்றே வேண்டுதலோடு
குப்பையில் வீசப்பட்டேன்..!



04

விபத்தான ஆப்பிள் வியாபாரியை
எல்லோரும் பொறுக்கி எடுத்து
மருந்தகத்தில் இணைத்தார்கள்
விபத்தில் உருண்டோடிய
ஆப்பிள்களை படுகவனத்தோடு
கூடையில் வைத்தார்கள்
விபத்தின் காயங்களுக்கு
கட்டுகளிட்டு சந்தைக்கு வந்தவன்
ஒரு அடிப்பட்ட ஆப்பிள் மாதிரி இருந்தான்
கூடையில் அழகாக அடுக்கப்பட்ட
ஆப்பிள்கள் கிலோ இருநூறுயென
அவனை வியாபித்துக் கொண்டிருந்தன..!

–  ச. துரை

நன்றி உன்னதம் இணைய இதழ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

நரன் கவிதைகள்