கவிஞர் நரனின் உப்பு நீர் முதலை





பருத்திக்காடு

பருத்தி அறுவடை முடிந்த
கரிசல் வெளியில்
பாடல் காட்சியொன்றின்
படப்பிடிப்பு நடக்கிறது
பாடல் காட்சியில் நடனமாடும்
துணைநடிகையின்
கால்களுக்கிடையே பூத்திருக்கிறது
பருத்தியொன்று
காட்சியில் அவள் நடனமாடும்போது
தாள லயங்களுககு ஏற்றவாறு
அப்பருத்தியும் ஆடுகிறது
உணவு வேளை இடைவேளையின்போது
நனைந்த பருத்தியைப் பறித்துவிட்டு
வேறொன்றைப் பூக்கச் செய்கிறாள்
காலிடையில்

படப்பிடிப்பை முடித்துச் செல்லும் அவளோடு
பெயர்ந்து செல்கிறது
ஒரு பருத்திக்காடு


கானகம்

புத்தகத்தின்
73ம் பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கிறது
அதில் தான்
தம் கரும்புரவியை
மேய்ந்து வரும்படிக்கு
அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்
கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்
வாசகன்
குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்
தேடி அலைகின்றனர்
கிழிந்து விழுந்த கானகத்தில்

உப்பளம்

உப்பளத்தில் அழுதுகொண்டிருந்தாள்
ஒருவன் அவள் அழுகையைப்
பிரித்து பிரித்து
பாத்தி கட்டிக்கொண்டிருந்தான்
சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தன
அவள் அழுகையை
வெவ்வேறு ஊர்களுக்கு
ஏற்றிச் செல்லவிருக்கும்
லாரிகள் ...
லாரிகள் ...

முதலை

நீர்த்தாவரத்தின்
இலையின் அடியில் ஊரும்
நீர்ப்புழுவை விழுங்கும் மீனைச்
சற்றைக்கெல்லாம் கவ்விவிட்டது
அக்கொக்கு
கொக்கின் தொண்டைக்குள்
மீன் நீந்தி இறங்கிகொண்டிருக்கையில்
கொக்கின் கால்களைப்
பற்றி இழுக்கிறது ஏரி முதலையொன்று
ஒரு குறியில்
ஒரு பாய்ச்சலில்
ஒரு வாயில்
ஊர்வன நீந்துவன பறப்பன என
அம்முதலை மூன்று இரையை
கவ்விக்கொண்டிருக்கிறது
இப்போது

நிலைக்கண்ணாடி

எதிர்வீட்டில் நிலைக்கதவின் நேர் எதிர்புறம்
மாட்டிவைத்திருக்கும்
மிகப்பெரிய நிலைக்கண்ணாடியில்
தினமும் கதவைத் திறந்துகொண்டு
கண்ணாடிக்குள் சென்று மறைந்துவிடுகின்றனர்
யாரேனும் அழைப்புமணியை அழுத்தும்போது
கண்ணாடியைத் திறந்துகொண்டு
பார்க்கிறார்கள்
பின் மீண்டும் கண்ணாடிக்குள் சென்று
மறைந்துவிடுகிறார்க்ள்
ஒரு நாள் அவ்வீட்டைக் காலிசெய்து
சாமான்களையெல்லாம் எடுத்துப்போனார்கள்
வாகனமொன்றில் ஏற்றி.
மிகப் பெரிய அந்நிலைக்கண்ணாடியைப் பிடித்தபடி
அமர்ந்திருந்தான் வேலையாள்.
மெல்ல நகரும் வாகனத்தில் கண்ணாடிக்குள் சென்று
மறைந்துகொண்டிருந்தன
அவ்வீதியிலுள்ள வீடுகள் எல்லாம்

தார்ச்சாலைகள் வெண்நிறக்கோடுகள்

வனங்களின் நடுவே
போடப்பட்ட தார்ச்சாலைகள்
அவற்றின் நடுவே
வலப்புறத்தையும்
இடப்புறத்தையும்
பிரித்துச் செல்லும்
வெண்நிறக் கோடுகள்
எப்போதும் அவற்றின் மேலேறி நடந்து செல்கின்றன
சில வரிக்குதிரைகள்
வரிக்குதிரைகளின் மேலேறிச் செல்கின்றன சில
தார்ச்சாலைகள் சில வெண்நிறக் கோடுகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முகுந்த் நாகராஜன் கவிதைகள்

தமிழின் நேரடி ஜென் கவிதைகள் - நரன்

நரன் கவிதைகள்