ஒரு மணல் மாத்திரை
ஒரு நூலிடை அவகாசம்தான்
உன்னை நெருங்க.
யுகமோ தள்ளித்தள்ளிப்போகிறது
அதற்குள் ஒரு நெல் வயல்
முற்றட்டும்.
தாகமுற்றவன் நிலநீரை பலமிடறு
அருந்தட்டும்.
அந்த புகைவண்டி
நிறுத்தங்களை அடையட்டும்.
ஈனட்டும் அந்தபெண்மாடு.
தீரட்டும் ஒருகுவளை மது.
உறங்கட்டும் இந்த ஜாமத்தின் களைப்பு.
உனக்கு என் முத்தம்
காலை அதன் விகாசத்தில்
உன் மார்புச் சளியை வெளியேற்றும் இரவை
செரித்து விழுங்கும் வரை திடமாயிரு.
அல்லது
நம் வயிற்றுப் புண்ணை ஒரு மணல் மாத்திரை சுகப்படுத்தட்டும்.
கவிஞர்- யவனிகா ஸ்ரீராம்
கருத்துகள்
கருத்துரையிடுக