1) நீர் தெளித்து விளையாடுதல் முன் பின் பழக்கம் இல்லாத பயண வழி உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு கை கழுவப் போனேன். சாதாரண உயரத்தில் இரண்டு வாஷ்பேசின்களும் மிகக்குறைந்த உயரத்தில் ஒரு வாஷ்பேசினும் இருந்தன. கை கழுவும்போது காரணம் தெரிந்து விட்டது. குள்ள வாஷ்பேசின் முன் இல்லாத குழந்தையின் மேல் செல்லமாக தண்ணீர் தெளித்து விளையாடி விட்டு விரைவாக வெளியே வந்து விட்டேன். 2) குழந்தைகளின் ஜன்னல்கள் இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட். உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா. வீடு இங்கேதான் இருக்கிறதாம். இதெல்லாம் ஒரு காரணமா? 3) ஒரே முறை தான் கலவரம் பழக்கப்பட்ட ஊரின் முகம் மாறிப் போயிற்று. தினம் போகும், வரும் சாலையில் டயர்களை எரித்துக் கொண்டிருந்தார்கள் கோஷம் போட்டபடி. தற்காலிக உற்சாகத்தில், பாதையின் குறுக்கே விழ மரத்தை அறுத்தது ஒரு கும்பல். அப்போதுதான் முதல் தடவையாய் அந்த மரத்தை அங்கு பார்த்தேன். 4) விளையாட்டுப் பிள்ளைகள் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன அந்தப் பூங்காவில். ஒன்று ஊஞ்சலில் நி...